பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் மத்தியஅரசு நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை குறைக்க தவறிய தன் விளைவாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
அனைத்து தரப்பு மக்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டிப்பதுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நிவாரணமாக அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழகஅரசிடம் மத்தியஅரசு ஒப்படைக்க வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.