மழவராயநல்லூர் கால்நடை துணை மருந்தகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கோட்டூர் அருகே மழவராயநல்லூர் கால்நடை துணை மருந்தகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல், கால்நடை துணை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் இந்த மருந்தக கட்டிடம் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மருந்தக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தட்டாங்கோவில், உச்சிமேடு, கீழகண்டமங்களம், மழவராயநல்லூர், திருவெண்டுதுறை கருப்பட்டிமூலைசேரி, குன்னியூர், வீராக்கி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனைக்கு வர வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக திருவெண்டுதுறை சமூதாயக் கூட கட்டிடத்துக்கு வாரம் ஒருநாள் மட்டும் கால்நடை டாக்டர் வந்து செல்கின்றார். பல கிராமங்களுக்கு டாக்டர் வந்து செல்லும் நேரம்
தெரியாததால் கால்நடை வளர்ப்போர் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
எனவே மழவராயநல்லூர் கால்நடை துணை மருந்தகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் வாரத்தில் 3 நாட்கள் டாக்டர் வந்து இங்கு சிகிச்ைச அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.