முதல்-அமைச்சரான பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளை வருகை

முதல்-அமைச்சரான பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திருக்குவளைக்கு வருகிறார். அங்கு தனது தந்தை கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

Update: 2021-07-07 10:50 GMT
நாகப்பட்டினம்,

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதன் முறையாக நாகை மாவட்டத்துக்கு இன்று(புதன்கிழமை) வருகிறார். திருவாரூரில் இன்று காலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளைக்கு வருகை தருகிறார்.

நாகை மாவட்ட எல்லையான கொளப்பாடு பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாகை ெதற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள தனது தந்தை இல்லமான முத்துவேலர் நூலகம், அஞ்சுகத்தம்மாள் படிப்பகத்துக்கு சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சென்று அங்கிருந்து காரில் புதுச்சேரி மார்க்கமாக சென்னை செல்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதையொட்டி நாகை மாவட்டத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 700 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் என ஆயிரம் பேர் திருக்குவளையில் இருந்து காரைக்கால் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இது தவிர 4 குழுக்களில் 20 போலீசார் வெடிகுண்டு பரிசோதனையில் முதல்-அமைச்சர் செல்லும் பாதையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்