தண்டவாளத்தில் இரும்பு தகடை வீசிய வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா
தண்டவாளத்தில் இரும்பு தகடை வீசிய வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32). இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்தம்பட்டி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் மது அருந்த சென்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில் ரெயில் வந்துள்ளது. இதை பார்த்த அவர்கள், தாங்கள் வைத்திருந்த இரும்பு தகடை தண்டவாளத்தில் வீசி விட்டு ஓடினர். இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் இருந்த இரும்பு தகடை அகற்றினார். இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் கோபிநாத் சேலம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகணபதி, கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செல்வகணபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கோவிந்தராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.