நிதி நிறுவன உரிமையாளர் கொலையில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பெங்களூருவில் நிதி நிறுவன உரிமையாளர் கொலையில் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-06 21:34 GMT
பெங்களூரு: பெங்களூருவில் நிதி நிறுவன உரிமையாளர் கொலையில் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நிதி நிறுவன உரிமையாளர் கொலை

பெங்களூரு வில்சன்கார்டன் அருகே லக்கசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 33). நிதி நிறுவன உரிமையாளரான இவர் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காலை மதன் தனது காரில் வெளியே சென்று விட்டு பனசங்கரி கோவில் அருகே கட்டப்படும் மெட்ரோ பாலம் அருகே வந்தார்.

பின்னர் காரை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கி கொண்டு காரின் அருகே மதன் வந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் நீண்ட வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த மதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அறிந்த ஜெயநகர் போலீசார், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை சம்பவம் குறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். மேலும் கொலையாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

7 பேர் கைது

இந்த நிலையில் மதன் கொலையில் தொடர்புடையதாக ரவுடி ஒருவரின் கூட்டாளிகளான மகேஷ், நவீன் உள்பட 7 பேரை ஜெயநகர் போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு சாந்திநகரில் ரவுடிகள் விஜி, லிங்கா கொலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த கொலைக்கு மதன் நிதி உதவி அளித்ததாக தெரிகிறது. இதன்காரணமாக மதன் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது.

இந்த நிலையில் மதனை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை உத்தரஹள்ளி அருகே நாககவுடனபாளையா பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக மகேஷ், நவீன் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதனால் அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய நேற்று காலை மகேஷ், நவீனை ஜெயநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தன் காலே, உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமண் ஆச்சார் தலைமையிலான போலீசார் நாககவுடனபாளையாவுக்கு அழைத்து சென்று இருந்தனர்.

ஆயுதங்களால் தாக்குதல்

பின்னர் 2 பேரும் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீசாரிடம் இருந்த ஆயுதங்களை மகேசும், நவீனும் சேர்ந்து பறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்தன் காலே, உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமண் ஆச்சாரின் கைகளில் தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மகேசும், நவீனும் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது இன்ஸ்பெக்டர் சுதர்சன் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி மகேஷ், நவீனை எச்சரித்தார். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்ததுடன் போலீஸ்காரர்களை மீண்டும் தாக்க வந்தனர்.

சுட்டுப்பிடிப்பு

இதனால் இன்ஸ்பெக்டர் சுதர்சன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நவீன், மகேசை நோக்கி சுட்டார். இதில் நவீனின் வலது காலிலும், மகேசின் இடது காலிலும் குண்டு துளைத்தது. இதனால் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட நவீன், மகேசை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி சென்று ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுபோல அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தன் காலே, உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமண் ஆச்சாரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நிதி நிறுவன ஊழியர் கொலையில் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்