பாதாமி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்; சித்தராமையா அறிவிப்பு

2023-ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாதாமி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2021-07-06 21:19 GMT
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா.
பெங்களூரு: 2023-ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாதாமி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

சாம்ராஜ்பேட்டையில்...

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கடந்த சட்டசபை தேர்தலில் மைசூரு சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வி அடைந்தார். ஆனால் பாதாமி தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி இருந்தார்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாதாமி தொகுதியில் சித்தராமையா மீண்டும் போட்டியிட போவதில்லை என்றும், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

சித்தராமையாவுக்கு வலியுறுத்தல்

மேலும் சமீபமாக சாம்ராஜ்பேட்டை தொகுதிக்கு அடிக்கடி சென்று, அந்த தொகுதி மக்களுக்கு சித்தராமையா கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அத்துடன் நேற்று முன்தினம் நான் சாம்ராஜ்பேட்டையின் மருமகன் என்று சித்தராமையா கூறி இருந்தார். இதன் காரணமாக அவர் சாம்ராஜ்பேட்டையில் தான் போட்டியிடுவது உறுதியானது.

இதற்கிடையில், நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள சித்தராமையா வீட்டு முன்பு பாதாமியில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்டோர், தங்களது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடும்படி வலியுறுத்தினார்கள். சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்களிடம் நான் மீண்டும் பாதாமி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சித்தராமையா கூறினார். பின்னர் சித்தராமையா பேசியதாவது:-

பாதாமியில் மீண்டும் போட்டி

2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் தங்களது தொகுதியில் போட்டியிடும்படி என்னிடம் கூறி வருகின்றனர். ஆனால் நான் பாதாமி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவேன். எந்த ஒரு முடிவு எடுத்தாலும், உங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுக்க மாட்டேன். பாதாமி தொகுதி மக்கள் மிகவும் நல்லவர்கள். கடந்த சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்பு தான் பாதாமியில் போட்டியிட முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எனனை பாதாமி மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள்.

இதனை நான் மறக்க மாட்டேன். அதற்கு சாத்தியமும் இல்லை. பாதாமி தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். அதில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். கடந்த 3 ஆண்டில் பாதாமியில் பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். இன்னும் 2 ஆண்டுக்குள் பாதாமி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். இது அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் என்னுடைய கடமையாகும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்