போலீஸ்காரரிடம் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு

போலீஸ்காரரிடம் தகராறு செய்தவரை தட்டிக்கேட்டதால் அண்ணன் மற்றும் தம்பியை அரிவாளால் அவர் வெட்டினார்.

Update: 2021-07-06 21:15 GMT
லால்குடி,
போலீஸ்காரரிடம் தகராறு செய்தவரை தட்டிக்கேட்டதால் அண்ணன் மற்றும் தம்பியை அரிவாளால் அவர் வெட்டினார்.

அண்ணன்-தம்பி

லால்குடி அருகே செங்கரையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் மகன்கள் ரவி என்கின்ற தொல்காப்பியன் (வயது 53), வார்டு கவுன்சிலர் புகழேந்தி (49). நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மது குடித்துவிட்டு அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதை அந்தவழியாக சென்ற தொல்காப்பியன் தட்டிக்கெட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கார்த்தி அவரது வீட்டுக்கு விரைந்தார். தொல்காப்பியன் தனது வீட்டுக்கு சென்று தம்பி புகழேந்தியை அழைத்துக்கொண்டு கார்த்தி மீது புகார் கொடுக்க பைக்கில் லால்குடி போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டார்.

அரிவாள் வெட்டு

அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்த கார்த்திக் செங்கரையூர் வழியில் எதிரே வந்த தொல்காப்பியன் புகழேந்தியை விரட்டி விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அங்கிருந்து கார்த்திக் தப்பி ஓடினார். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்