மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் மறியல்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டை ஓடுகளுடன் மறியல்
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் மாவட்ட தலைவர் மேகராஜன் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரைநிர்வாண கோலத்தில் கழுத்தில் மண்டை ஓடுகளை அணிந்தும் கோஷமிட்டனர்.
தடையை மீறி திரண்டனர்
இந்த நிலையில், மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற விவசாயிகளை பிரதான நுழைவு வாயில் முன் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர், தடையை மீறி பிரதான கதவின் மீது ஏறிக்குதிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதற்கிடையே, மற்றொரு நிகழ்ச்சிக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அமைச்சர் உறுதி
அப்போது அய்யாக்கண்ணு, ‘கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க கூடாது. தென்பண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிய அணையை இடித்து தள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு விவசாயிகளிடையே பேசும்போது, கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட விட மாட்டோம். தென்பண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டியதை நாம் இடிக்க முடியாது. அதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
விவசாயிகளுக்கு புதிய நீர்ப்பாசன திட்டங்களை வரும் பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட், தி.மு.க. அரசில் தான் போடப்படுகிறது. முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு அளித்த வாக்குறுதிகளை விவசாயிகள் கை தட்டி வரவேற்றனர். பின்னர், மகிழ்ச்சியுடன் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.