மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை சாவு

வேப்பந்தட்டை அருகே வீட்டில் குழந்தை பெற்ற தாய் இறந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தையும் இறந்தது.

Update: 2021-07-06 19:23 GMT
வேப்பந்தட்டை:

மருத்துவமனையில் சிகிச்சை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 23). இவரும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன்(35) என்பவரும் காதலித்து, திருமணம் செய்யாமல் கணவன்-மனைவியை போல் காரியானூரில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜாமணி கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை பெறாத நிலையில் கடந்த 1-ந் தேதி ராஜாமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு சென்று முறையாக சிகிச்சை மேற்கொள்ளாத நிலையில் தாயை தொடர்ந்து குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்