நாமக்கல்லில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 2 ஆயிரத்து 100 மூட்டை பருத்தி ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2021-07-06 19:03 GMT
நாமக்கல்,
நாமக்கல்லில் நேற்று 2 ஆயிரத்து 100 மூட்டை பருத்தி ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாத காலமாக ஏலம் நடைபெறவில்லை. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் அரசு தளர்வுகள் அறிவித்தது. 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பருத்தி ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2,100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.45 லட்சத்துக்கு விற்பனை
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.45 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 769 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 300 ரூபாய் வரையிலும், டி.சி.எச்.ரக பருத்தி ரூ.6 ஆயிரத்து 211 முதல் ரூ.8 ஆயிரத்து 1 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 99 முதல் ரூ.4 ஆயிரத்து 99 வரையிலும் ஏலம் போனது.
இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி, எள் டெண்டர் நடந்தது. பருத்தி பி.டி.ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 789 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 69 முதல் ரூ.7 ஆயிரத்து 72 வரையிலும் விற்பனையானது.
சிவப்பு எள் கிலோவுக்கு ரூ.82.50 முதல் ரூ.99.50 வரையிலும், வெள்ளை எள் கிலோவுக்கு ரூ.81 முதல் ரூ.99.90 வரையிலும், கருப்பு எள் கிலோவுக்கு ரூ.86.90 முதல் ரூ.106.90 வரையிலும் 400 மூட்டைகள் ரூ.25 லட்சத்திற்கும் ஆக மொத்தம் ரூ்29 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்