தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழையின்போது காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கங்களை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு செய்து காட்ட வேண்டும். தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு படகுகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர், புயல் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேவைப்படும்போது தங்க வைப்பதற்கு தகுதியானவைகளை தேர்ந்தெடுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உணவுப்பொருட்கள் இருப்பு
மழை வெள்ள காலங்களில் நீர் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறையினர், சாலைகளில் மரங்கள் விழுதல், மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின் கம்பங்கள் சாய்தல் போன்றவற்றை உடனுக்குடன் சரிசெய்து சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், இதேபோல் உணவு பொருட்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருப்பு வைக்க வேண்டும்.
விடுப்பின்றி பணியாற்ற அறிவுரை
தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரப்பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் அவசர காலத்தில் விடுப்பில் செல்லாமல் உரிய மக்கள் பணியாற்றி அரசுக்கு உதவியாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.