சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தை அ தி மு க வினர் திடீர் முற்றுகை
கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றக்கோரி சின்னசேலம் ஒன்றிய அலுலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
சின்னசேலம்
திட்டப்பணிகள்
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு உத்தரவு பெறப்பட்டு பணிகள் நடந்து வந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு மேற்படி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளுக்கான நிதி வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும், நிறைவடைந்த பணிகளுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் தலைமையில், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் அருள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
அ.தி.மு.க.வினர் முற்றுகை
ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி இல்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரியை வரவழைக்க கோரி அங்கு பணியில் இ்ருந்த அலுவலர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதை அறிந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன் பின்னர் அ.தி.மு.க.வினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அ.தி.மு.க.வினரின் முற்றுகையிட்ட சம்பவம் சின்னசேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.