பொள்ளாச்சியில் அண்ணனை கொலை செய்த பெயிண்டர் கைது

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் அண்ணணை கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-06 17:39 GMT
பொள்ளாச்சி

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் அண்ணணை கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர்

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகன்கள் ஆறுமுகம் (வயது 43), கிருஷ்ணமூர்த்தி (41). இவர்கள் 2 பேரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்து ஆறுமுகம் தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பி கிருஷ்ணமூர்த்தி மது குடிக்க பணம் கேட்டார். அப்போது ஆறுமுகம் பணம் தர முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

குத்திக்கொலை

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய போது ஆத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆறுமுகத்தை வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்  கீழே சரிந்தார். இதை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அக்கம், பக்கத்தினர் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

தம்பி கைது

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் தப்பி ஒடிய கிருஷ்ணமூர்த்தி தேடி வந்தனர். இதற்கிடையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சூளேஸ்வரன்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் அண்ணனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்