போலீஸ்காரரின் தந்தைக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் பரபரப்பு

தேனியில் நடந்த சிறப்பு முகாமில், போலீஸ்காரரின் தந்தைக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-06 17:21 GMT
தேனி: 

 ஒரேநேரத்தில் 2 டோஸ்
உலகை அச்சுறுத்தி உள்ள கொரோனாவின் 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. விரைவில் 3-வது அலையும் உருவாகும் என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க, தடுப்பூசி செலுத்துவது மட்டுமே சிறந்த ஆயுதம் ஆகும். இதனால் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், மருத்துவத்துறை ஊழியர்களின் கவனக்குறைவால் ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சம்பவம் அரங்கேறி வருகிறது.

 தேனியில் பரபரப்பு 
அதன்படி பீகார் மாநிலத்தில், கடந்த மாதம் நடந்த முகாமில் 63 வயது பெண்ணுக்கு ஒரேநேரத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
இதேபோல் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ஒருவருக்கு, ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தேனி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில்  தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். 

 நர்சுகளின் கவனக்குறைவு
அதன்படி தடுப்பூசி செலுத்துவதற்காக, தேனி கோட்டைக்களம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 65) என்பவர் வந்தார். அவர் ஏற்கனவே முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு இருந்தார். 

இதனால் 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்தார். அவருடைய ஆதார் விவரங்களை சரிபார்த்தனர். பின்னர் அவருக்கு நர்சு ஒருவர், 2-வது தவணை தடுப்பூசியை செலுத்தினார். அவரை சிறிது நேரம் அமர்ந்து செல்லும்படி நர்சு கூறினார்.  

இதனால் அவர் அப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மற்றொரு நர்சும் மீண்டும் அவருக்கு தடுப்பூசி செலுத்தினார். இதையடுத்து அவர் தனக்கு சில நிமிடத்துக்கு முன்பு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறினார். 

நர்சுகளின் கவனக்குறைவால் ஒரே நேரத்தில், சந்திரசேகருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவத்தால் மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

  போலீசில் புகார்
இந்தநிலையில் கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சந்திரசேகரிடம் மருத்துவ குழுவினர் எடுத்து கூறினர்.

இருப்பினும், கவனக்குறைவால் ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவர், தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘கவனக்குறைவால் இது நடந்து இருக்கிறது. ஒருவருக்கு 0.5 மில்லிலிட்டர் அளவு மருந்து தான் தடுப்பூசியாக செலுத்தப்படுகிறது. 2 டோஸ் என்பது ஒரு மில்லிலிட்டர் தான். அதனால், பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்றார்.

போலீஸ்காரரின் தந்தை
2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சந்திரசேகர், போலீஸ்காரர் ஒருவரின் தந்தை ஆவார். அவருடைய மகன் முத்துக்குமார், தேனியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்