கோவிலுக்கு சொந்தமான ரூ 1 கோடி நிலம் மீட்பு
தனியார் ஓட்டலை இடித்து அகற்றிவிட்டு கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலத்தை மீட்டு, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை
தனியார் ஓட்டலை இடித்து அகற்றிவிட்டு கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலத்தை மீட்டு, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
கோவை காந்திபார்க் அருகே உள்ள சுக்ரவார்பேட்டையில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 909 சதுர அடியில் சிறுவாணி என்ற பெயரில் ஓட்டல் கட்டப்பட்டு இருந்தது.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஓட்டல் விரிவு படுத்தப்பட்டது. எனவே கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இடித்து அகற்றம்
இந்த நிலையில் ஓட்டல் கட்டப்பட்டுள்ள இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என தீர்ப்பு வந்தது. இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஓட்டல் கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜய லட்சுமி தலைமையில், தெற்கு தாசில்தார் புனிதா, வருவாய்த்துறை அலுவலர்கள், கோவில் தக்கார், செயல் அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஓட்டல் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
ரூ.1 கோடி மதிப்பு
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றப்பட்டது.