தொரப்பள்ளியில் தொழிலாளியை விரட்டிய காட்டுயானை
தொரப்பள்ளியில் தொழிலாளியை விரட்டிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ளது. இங்கு முதுமலையில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் அங்கு நேற்று காலை 6 மணிக்கு தனியார் எஸ்டேட் பகுதியில் இருந்து கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு காட்டுயானை ஒன்று வந்தது. இதை கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது அந்த சாலையில் காட்டுயானை வருவதை கவனிக்காமல் தொழிலாளி ஒருவர் நடந்து வந்தார். சற்று தொலைவில் பதற்றத்துடன் நின்றிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு அவரை உஷார்படுத்தினர். மேலும் காட்டுயானை அவரை நோக்கி ஓடி வந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர், ஓட்டம் பிடித்தார்.
அப்போது காட்டுயானை அவரை துரத்தியது. பின்னர் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியின் மறுபுறம் சென்று தொழிலாளி பதுங்கி உயிர் தப்பினார். தொடர்ந்து காட்டுயானை முதுமலை வனத்துறை சோதனைச்சாவடியை அடைந்தது. அங்கு பணியில் இருந்த வன ஊழியர்கள் தப்பி ஓடினர். அதன்பின்னர் காட்டுயானை முதுமலை வனத்துக்குள் சென்றது.
பின்னர் வனத்துறையினர் ஜீப்பில் சென்று காட்டுயானையை அடர்ந்த வனத்துக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொழிலாளியை காட்டுயானை விரட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோன்று பந்தலூர் அருகே சேரம்பாடியில் போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவில் காட்டுயானை ஒன்று புகுந்தது. இதனால் பணி முடிந்து குடியிருப்பு செல்ல முயன்ற போலீசார் பீதி அடைந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கே சென்று தஞ்சம் புகுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி வனத்துறையினர் காட்டுயானையை விரட்டியத்தனர்.