கிருஷ்ணகிரியில் டாக்டர் தம்பதி வீட்டில் 24 பவுன் நகை, பணம் திருட்டு
கிருஷ்ணகிரியில் டாக்டர் தம்பதி வீட்டில் 24 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
டாக்டர் தம்பதி
கிருஷ்ணகிரி சாந்திநகர் முதல்கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 39). டாக்டர். இவருடைய மனைவியும் டாக்டர் ஆவார். கடந்த 4-ந் தேதி டாக்டர் ரமேஷ்குமார், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் அரூருக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 24¼ பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் ரமேஷ்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதே போல கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். டாக்டர் தம்பதி வீட்டுக்குள் புகுந்து நகைகள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.