திட்டப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஒன்றியக்குழு தலைவரிடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

ஏரியூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-06 16:31 GMT
1ஃஃஏரியூர்:
ஏரியூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  இதில் பா.ம.க.வை சேர்ந்த துணை தலைவர் தனபால், தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்தில் நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் பா.ம.க.வை சேர்ந்த துணை தலைவர் ஆகியோர் ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளில் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வெளிநடப்பு
மேலும் அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு, கொரோனா தடுப்பு பணிகளில் முறைகேடு, பரிசல் துறை ஒப்பந்தத்தில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுக்களை தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் மற்றும் துணை தலைவர் ஆகியோர் முன்வைத்து ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
மேலும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து, தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், துணை தலைவர் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், அந்த பகுதியில்  பதற்றம் நிலவியது.

மேலும் செய்திகள்