கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து வருகிறது

கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து வருகிறது;

Update: 2021-07-06 15:58 GMT
திருப்பூர்
கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவில்களில் சாமி தரிசனம்
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக கடும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. இதில் மிக முக்கியமாக பொது போக்குவரத்து முடக்கம், கோவில்கள் திறக்க அனுமதி ரத்து, சந்தைகள் இயங்க அனுமதி மறுப்பு போன்றவை இருந்தன. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளையும் வழங்கியது.
இந்த ஒரு பகுதியாக நேற்று முன்தினம் முதல் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பலரும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்ற சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதுபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
மல்லிகை பூ விலை உயர்வு
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பொதுமக்கள் பலரும் மார்க்கெட்டிற்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக கோவில்களின் அருகே பூக்கடை நடத்துகிறவர்களும் பூக்கள் மும்முரமாக வாங்கி செல்கிறார்கள். இதன் காரணமாக நேற்று காட்டன் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து காணப்பட்டது. திருப்பூரில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லைப்பூ ரூ.160-க்கும், அரளிப்பூ ரூ.30-க்கும், பிச்சிப்பூ ரூ.240-க்கும், ரோஜா ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காட்டன் மார்க்கெட்டிற்கு நேற்று ஒரு டன் பூக்களே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்