நவீன எந்திரங்கள் மூலம் நெல் நடவு பணி
நிலக்கோட்டை தாலுகாவில் நவீன எந்திரங்கள் மூலம் நெல் நடவு பணி நடைபெறுவதை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி, மட்டப்பாறை பகுதிகளில் தற்போது நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு, விவசாய எந்திரங்கள் மூலம் நவீன முறையில் நெல் நடவு பணி நேற்று நடந்தது.
இந்த பணியை கலெக்டர் விசாகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். மேலும் விளாம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
இதேபோல் வேளாண்மைத்துறை சார்பில், தமிழக அரசு ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து மாலையகவுண்டன்பட்டி பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிட்டங்கியை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண்துறை இணை இயக்குனர் பாண்டித்துரை, உதவி இணை இயக்குனர்கள் ரவிபாரதி, அமலா, நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியாண்டி, கிருஷ்ணன், நிலக்கோட்டை வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் பாண்டியம்மாள், சென்னா கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஹேமலதா, மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.