சாலையில் விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் போராட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து சாலையில விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-06 14:17 GMT
திண்டுக்கல்:

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு விட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அதன்படி திண்டுக்கல் பேகம்பூரில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, உமன் இந்தியா மூவ்மென்ட் எனும் அமைப்பை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அந்த அமைப்பின் மாவட்ட நிர்வாகி பல்கீஸ்பானு தலைமை தாங்கினார். மேலும் நிர்வாகிகள் ஆசியா மரியம், ஆயிஷாம்மாள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்லத்தீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கியாஸ் விலை உயர்வை கண்டித்து பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் விலை உயர்வை குறிக்கும் வகையில் காலி சிலிண்டரை வைத்தனர். மேலும் செங்கற்களை கொண்டு சாலையில் அடுப்பு அமைக்கப்பட்டது. 

இதையடுத்து மண் பானையை வைத்து விறகு எரித்து சமையல் செய்வது போன்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
---------

மேலும் செய்திகள்