உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 1,300 மனுக்களுக்கு தீர்வு
தேனி மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட 1,300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி:
10,300 மனுக்கள்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை அறிவித்து அதற்கென தனி துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காண முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ஆயிரத்து 300 மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாத நிலவரப்படி இதில் 220 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருந்தன.
ஏராளமான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களையும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டேன். அதன்படி மறுபரிசீலனை செய்யப்பட்ட பல மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
1,300 தீர்வு
இதுவரை முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வங்கிக்கடன் உதவி, சாலை அமைத்தல் தொடர்பான 1,300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் சாலை அமைத்தல் தொடர்பான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனுக்களை தள்ளுபடி செய்யும் சூழல் ஏற்பட்டால் எதற்காக தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற காரணம் குறித்த விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு வேலை கேட்டு சுமார் 1,600 மனுக்கள் வந்துள்ளன. அனைவருக்கும் நேரடியாக அரசு வேலை உடனடியாக வழங்க இயலாத சூழல் உள்ளதால், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
அரசு உத்தரவு, அரசு நிதிஒதுக்கீடு போன்ற காரணங்களை எதிர்பார்த்து 1,012 மனுக்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது. மற்ற மனுக்கள் மீது தொடர்ந்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.