குடிமராமத்து திட்ட பணிகளில் முறைகேடு
போடி தொகுதியில் குடிமராமத்து திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
தேனி:
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்செல்வன் தலைமையில், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம், தங்கதமிழ்செல்வன் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பூதிப்புரம் பேரூராட்சி வாழையாத்துப்பட்டியில் ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் குறுகலாக உள்ளதால் விவசாய நிலங்களுக்கு கனரக வாகனங்கள் சென்று வர முடியவில்லை.
எனவே, அதன் அருகில் வேறு பாலம் அமைக்க வேண்டும். பூதிப்புரத்தில் உள்ள ராஜபூபாலசமுத்திரம் கண்மாய் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாயை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தில் தூர்வாருவதாக கூறி சில மரங்களை வெட்டி, கரைகளை மட்டும் சீரமைத்துள்ளனர். முறையாக தூர்வாராமல் நிதி முறைகேடு நடந்துள்ளது.
போடி தொகுதியில் மேலும் சில கண்மாய்களிலும் குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் தெரிவித்தோம்.
பூதிப்புரத்தில் இருந்து போடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். போடியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 11 ஆண்டாக பூட்டிக் கிடக்கிறது. அந்த கட்டிடத்தை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பூதிப்புரம் பேரூராட்சிக்கு அரசு பஸ் இயக்கவில்லை. இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.