மயிலாடுதுறையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்; வழிபாட்டு தலங்கள் திறப்பு - பஸ் போக்குவரத்து தொடங்கியது

மயிலாடுதுறையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து தொடங்கியது.

Update: 2021-07-06 13:32 GMT
மயிலாடுதுறை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கடந்த மே மாதம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பால், மருந்து கடைகள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வழிபாட்டுத்தலங்களில் மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. உள் மாவட்டத்திலும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ஓட்டல்கள், டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டன.

வணிக வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக் மதுபானக்கடைகளும் திறந்திருந்தன. நேற்று மயிலாடுதுறை பஸ் நிலையங்களில் இருந்து வழக்கத்தைவிட குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மயிலாடுதுறை நகரில் நேற்று கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் காணப்பட்டாலும், கடைவீதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

ஊரடங்கு தளர்வுகளின்படி திருவெண்காட்டில் உள்ள புதன் தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோவில், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள கேது தலமான நாகநாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம் சிவன் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில், எருக்கூர் நாராயண பெருமாள் கோவில், பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவில், பலைவனம் பட்டினத்தார் கோவில், நாங்கூர் திவ்ய தேச பெருமாள் கோவில்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் குறைவான பக்தர்களே சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சானிடைசர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் முருகன், குணசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து வரும் பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்