பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி தே.மு.தி.க.வினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-07-06 12:56 GMT
மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பண்ணை பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாக்கம் சிவா, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக மயூரநாதர் கோவில் சன்னதியில் இருந்து மாவட்ட செயலாளர் தலைமையில் தே.மு.தி.க.வினர் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பிரசன்னா, ரவீந்திரன், ராசி.மதிவாணன், ராஜ்குமார், கனிமொழி, சுரேஷ், பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்