கோவில்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் கந்து வட்டி கொடுமைக்கு தீர்வுகாணக் கோரி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் கந்து வட்டி கொடுமைக்கு தீர்வுகாணக் கோரி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அய்யலுசாமி தலைமையில், கோவில்பட்டி நகர தலைவர் சண்முகராஜ், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத் துரை, துணை தலைவர் கருப்பசாமி, காங்கிரஸ் சேவா தளம் மாவட்ட தலைவர் சக்தி விநாயகர் ஆகியோர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் அதிகரித்து வரும் கந்துவட்டி கொடுமைக்கு தீர்வுகாண வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கந்துவட்டி கொடுமை
கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் பகுதி மக்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் கந்து வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்கி அவதி பட்டு வருகிறார்கள். இவர்கள் ரூ.1 லட்சம் கடன் வாங்கினால் தினமும் ரூ.1000 வட்டியாக கொடுக்க வேண்டும். அடுத்து ரூ.1 லட்சம் வாங்கினால் வாரம் ரூ.5 ஆயிரம் வட்டி கட்ட வேண்டும். கடன் வாங்குபவர்கள் பூர்த்தி செய்யப்படாத வங்கி செக்கில் கையெழுத்து போட்டு கொடுப்ப துடன், புரோநோட்டும் பணம் நிரப்ப படாமல் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். இந்த வகையில் கந்து வட்டிக்கு கடன்வாங்கி ஏராளமானோர் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாதிக்கப்படும் மக்கள் போலீசில் புகார் கொடுக்கவும் அச்சப்படுகின்றனர். கந்து வட்டி கொடுப் பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனி குழு அமைத்து கந்து வட்டியை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார்.