குமரியில் இருந்து கோவை, திருப்பூருக்கு பஸ்கள் இயக்கம்
குமரி மாவட்டத்தில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
நாகர்கோவில்,
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருந்தாலும் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து பஸ் போக்குவரத்து சேவை இல்லாமல் இருந்தது. இதனால் குமரி மாவட்ட பொதுமக்கள் ரெயில்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே விதமான ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குமரி மாவட்டத்திலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. காலை, மாலை மற்றும் இரவு ஆகிய 3 நேரங்களிலும் பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு 8 பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல திருப்பூருக்கு 2 பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் திருப்பூர் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் பஸ்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதே சமயம் அரசு உத்தரவு வராததால் சுற்றுலாதலமான ஊட்டிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் ேசர்த்து சுமார் 650 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக ஒசூருக்கு 2 பஸ்களும், கடலூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு தலா ஒரு பஸ்சும், கோவைக்கு 4 பஸ்களும் இயக்கப்பட்டன. இதே போல கன்னியாகுமரி மற்றும் மார்த்தாண்டத்தில் இருந்தும் கோவை, கடலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு விரைவு பஸ்களில் ஓரளவுக்கு பயணிகள் கூட்டம் இருந்தது. குமரி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து வழக்கம் போல இருந்ததால் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.