திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிள்- மினிவேன் மோதல்; வாலிபர் பலி

திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2021-07-06 05:40 GMT
திருவள்ளூர்,

சென்னை சானிடோரியம் காமாட்சி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28). நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரான மகாலிங்கம் (34) என்பவருடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோதும் எதிரே திருத்தணி நோக்கி வேகமாக வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், மகாலிங்கம் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார். இதில் காயமடைந்த மகாலிங்கத்தை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வேன் டிரைவரான ரத்தினகுமார் (55) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதே போல் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சமையல் கியாஸ் டேங்கர் லாரி டிரைவர் கந்தவேலு (35). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கிற்கு தனது டேங்கர் லாரியை ஓட்டி வந்தார்.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புதுகும்மிடிப்பூண்டி பஜாருக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள இரும்பு வேலியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்த கந்தவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்