போலி சான்றிதழில் பிளஸ்-2 படிப்பில் சேர்ந்த மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் ரத்து- முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

போலி சான்றிதழில் பிளஸ்-2 படிப்பில் சேர்ந்த மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலை ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-07-05 22:42 GMT
சேலம்:
போலி சான்றிதழில் பிளஸ்-2 படிப்பில் சேர்ந்த மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலை ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
மதிப்பெண் சான்றிதழ்
எடப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்த ஒரு மாணவன் 2018-19-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினான். இதில் ஆங்கில பாடத்தில் அந்த மாணவன் தோல்வி அடைந்தான். பின்னர் இணையதளம் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் 31 மதிப்பெண்ணை 35 ஆக மாற்றி உள்ளான். அத்துடன் பெயில் என்பதை தேர்ச்சியானது போல் பி என மாற்றி உள்ளான்.
அதேசமயம் சான்றிதழில் மதிப்பெண் எழுத்தால் எழுதப்பட்டு இருந்ததை மாற்றவில்லை. தொடர்ந்து மாணவன் அதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்துள்ளான்.  அங்கிருந்த ஆசிரியர்கள் சரியாக கவனிக்காமல் மாணவனுக்கு சேர்க்கை வழங்கினர். சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அசல் மதிப்பெண் சான்றிதழ் வர காலதாமதமாகும் என மாணவன் தெரிவித்துள்ளான். இதனால் ஆசிரியர்கள் அப்போது பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேலும் ஆசிரியர்கள் அடிக்கடி மாணவனிடம் சான்றிதழ் கேட்டும் அந்த மாணவர் சான்றிதழ் சமர்ப்பிக்க வில்லை.
மதிப்பெண் பட்டியல் ரத்து
இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கிடுவதால் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவிட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட மாணவனின் சான்றிதழை சரிபார்த்த போது அதில் சான்றிதழில் மாணவன் திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாத நிலையில் மதிப்பெண் சான்றிதழில் திருத்தி போலி சான்றிதழில் கொடுத்து பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கணேசமூர்த்தி கூறும் போது, எடப்பாடி கல்வி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை திருத்தி மேல்வகுப்பில் சேர்ந்தது தெரியவந்தது. மேலும் போலி சான்றிதழில் பிளஸ்-2 படிப்பில் சேர்ந்த அந்த மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மதிப்பெண் பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி அதிகாரிகள் விசாரணை அறிக்கைக்கு பின்னர் கவன குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீதும், சம்பந்தப்பட்ட மாணவன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்