கொரோனா தளர்வுகள் அமலுக்கு வந்தன: சேலம் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

கொரோனா தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து கோவில்களில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-05 22:38 GMT
சேலம்:
கொரோனா தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து கோவில்களில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
1,412 கோவில்கள்
சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,412 கோவில்கள் உள்ளன. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் பலர் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி, சேலம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன், சுகவனேசுவர், கோட்டை பெருமாள் கோவில், எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் காலையிலேயே வந்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம்
கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியுடன் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
எந்த கோவிலிலும் அர்ச்சனை செய்யப்படவில்லை. முன்னதாக கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்களின் கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரபுரநாதர் கோவில்
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சேலம் மாவட்ட உதவி ஆணையர் உமாதேவி கூறும் போது, மாவட்டத்தில் இன்று (நேற்று) முதல் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கோவிலிலும் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவுடன் அங்கிருந்து உடனடியாக அனுப்பி வைக்கபட்டனர். யாரும் உட்கார்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட எந்த வழிபாடுகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. என்றார்.
சேலம் அருகே உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நேற்று பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்பட்டனர். கோவில் வளாகத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர் மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்