வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.

Update: 2021-07-05 21:23 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.புதூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 48). தையல் தொழிலாளியான இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தையல் கடை நடத்தி வந்தார். தங்கராஜ் வழக்கம்போல் நேற்று தையல் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் தங்கராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான லாடபுரம் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் நல்லேந்திரனை (34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45) சம்பவத்தன்று ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த ரவீந்திரன் மகன் செல்வமுருகன் (23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முருகேசன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்