கள்ளக்காதலை கண்டித்த பி.யூ. கல்லூரி துணை முதல்வர் கொலை; மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
பி.யூ.சி. துணை முதல்வர் வழுக்கி விழுந்து செத்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார். அதாவது கள்ளக்காதலை கண்டித்ததால் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சை திணறடித்து கொன்றது அம்பலமானது.
மண்டியா: பி.யூ.சி. துணை முதல்வர் வழுக்கி விழுந்து செத்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார். அதாவது கள்ளக்காதலை கண்டித்ததால் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சை திணறடித்து கொன்றது அம்பலமானது.
பி.யூ. கல்லூரி துணை முதல்வர் சாவில் சந்தேகம்
மண்டியா (மாவட்டம்) டவுன் குதலு ரோடு பகுதியை சேர்ந்தவர் அல்தாப் மெகதி. இவர் மண்டியா அருகே தக்கஹள்ளி பகுதியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி துணை முதல்வராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரிஸ்வானா பேகம் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி இரவு அல்தாப் மெகதி கழிவறையில் கால்வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக அவரது மனைவி ரிஸ்வானா பேகம் கூறினார். ஆனால் அல்தாபின் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மண்டியா டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
மனைவிக்கு கள்ளக்காதல்
சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நேரத்தில் அல்தாபுடன் ரிஸ்வானா பேகம் மட்டுமே இருந்துள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில் ரிஸ்வானா பேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
அதாவது, ரிஸ்வானா பேகத்திற்கும், தாவணகெரேயை சேர்ந்த ரகமத் உல்லா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் ரிஸ்வானா பேகம் தனது கள்ளக்காதலன் ரகமத் உல்லாவுக்கு இரும்பு கடை வைக்க உதவி செய்துள்ளார். அத்துடன் ரகமத் உல்லா கடையில் வேலைக்கு செல்வதாக கூறி ரிஸ்வானா பேகம் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
தலையணையால் அழுத்தி...
இதுபற்றி அல்தாப்புக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் ரிஸ்வானா பேகத்தை கண்டித்துள்ளார். இருப்பினும் ரிஸ்வானா பேகம் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதை அறிந்த அல்தாப், ரிஸ்வானா பேகத்துடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து ரிஸ்வானா பேகம் கள்ளக்காதலன் ரகமத் உல்லாவிடம் கூறியுள்ளார்.மேலும் அல்தாப்பை கொலை செய்தால் தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என இருவரும் கருதினர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் தீட்டினர்.
அதன்படி கடந்த 29-ந்தேதி அல்தாப் தூங்கியதும் வீட்டுக்கு ரகமத் உல்லாவை ரிஸ்வானா பேகம் வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்த தலையணையால் அல்தாப் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். அப்போது அவர் உயிருக்கு போராடிய போது அவரது உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை மறைக்க ரிஸ்வானா பேகம், அல்தாப் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து ரிஸ்வானா பேகம், ரகமத் உல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான ரகமத் உல்லாவுக்கு, ரிஸ்வானா பேகத்தின் மகன் வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.