மங்களூருவில் ஷோரூமில் புகுந்து ரூ.70 லட்சம் செல்போன்கள் திருட்டு

மங்களூருவில் செல்போன் ஷோரூமில் புகுந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம்நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-05 21:09 GMT
மங்களூரு: மங்களூருவில் செல்போன் ஷோரூமில் புகுந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம்நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

 செல்போன் ஷோரூம்

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் கத்ரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்மட்டா பகுதியில் ஒரு செல்போன் ஷோரூம் உள்ளது. இந்த செல்போன் ஷோரூமை நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து ஊழியர்கள் மூடி சென்றனர். நேற்று காலை ஊழியர்கள், செல்போன் ஷோரூமை திறக்க வந்தனர். 

அப்போது ஷோரூமின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடப்பதையும், அலமாரியில் இருந்த செல்போன்கள் சிதறி கிடந்ததையும் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் நள்ளிரவில் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் நுழைந்து விலையுர்ந்த செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. 

ரூ.70 லட்சம் செல்போன்கள்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கத்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ரூ.70 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் ஷோரூமில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. மேலும் ஜன்னல் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை மர்மநபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மீண்டும் கைவரிசை

இதே செல்போன் ஷோரூமில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த காவலாளி உதவியுடன் திருட்டு நடந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே ஷோரூமில் திருட்டு நடந்திருப்பது நினைவுக்கூரத்தக்கது. 

தற்போது நடந்த திருட்டு தொடர்பாக ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்