துப்பாக்கியால் சுட்டு தாய்மாமன் படுகொலை; வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
மாலூர் தாலுகாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டு தாய்மாமனை கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கோலார்: மாலூர் தாலுகாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டு தாய்மாமனை கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தாய்மாமன்
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா லக்கூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கொள்ளஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா(வயது 35). இவரின் அக்காள் மகன் வெங்கடேஷ்(22). இவர்கள் இருவரும் நாள்தோறும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதே போல நேற்று முன்தினம் இரவும் முனியப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் மது குடித்துவிட்டு வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டனர்.
இவர்களின் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தனது தாய்மாமன் முனியப்பாவை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த முனியப்பா ரத்த வௌ்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வலைவீச்சு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாலூர் டவுன் போலீசார் விரைந்து வந்து முனியப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.