பழனி முருகன் கோவிலில் ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
பழனி முருகன் கோவிலில் ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பழனி:
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று காலை பழனிக்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் பழனி முருகன் கோவில் சார்பில் ரூ.22 கோடியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதையடுத்து கோவில் மேம்பாட்டு பணிக்கு எடுக்க உள்ள 52 ஏக்கர் நிலப்பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து கோவில் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிந்துரை செய்தார். இதையடுத்து அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் மின்இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். ஆனால் அமைச்சர் சேகர்பாபு படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்றார். பக்தர்கள் நடந்து வரும் பாதையில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
உள்கட்டமைப்பு
பின்னர் மலைக்கோவிலுக்கு வந்த அமைச்சர்களுக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் பூஜையின்போது ஓதுவார்கள் பாடும் திருப்பதிகங்கள் மற்றும் போற்றி மந்திரங்கள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, சேகர்பாபு ஆகியோர் பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பழனியாண்டவர் மெட்ரிக்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி, கலைக்கல்லூரி, தொழில்நுட்பக்கல்லூரிக்கு சென்று குடிநீர், கழிப்பிடம், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அதையடுத்து பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க கையகப்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து கோவில் அலுவலர்கள், பொறியாளர்கள், பள்ளி, கல்லூரி முதல்வர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு, கல்வி நிறுவனங்களுக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
நிரந்தர பணியாளர்கள்
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பழனி முருகன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டியில் கலைக்கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பழனி முருகன் கோவிலில் பணிகளை முடித்து ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி நகருக்காக கோவில் சார்பில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் 2 மாதங்களில் முடிக்கப்படும்.
பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல 2-வது ரோப்கார் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறாமல் கடந்த ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்டது. 2-வது ரோப்கார் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தேவையான அளவு நிரந்தர பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கடந்த ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் தொய்வாக இருந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். பெரியநாயகி அம்மன் கோவில் தேரில் மராமத்து பணிகள் மேற்கொண்டு அடுத்த தைப்பூச திருவிழாவுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை அரசிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி விரைவில் மருத்துவக்கல்லூரி நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் விசாகன், எம்.பி. வேலுசாமி, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.