ஈரோட்டில் பரபரப்பு; ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்- மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து போராட்டம்
ஈரோடு மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து, ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து, ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூல்
ஈரோடு ஆர்.கே. வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 700- க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருவதால் எப்போதும் காய்கறி மார்க்கெட் பரபரப்பாக காணப்படும்.
காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் இருந்து எவ்வளவு வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக இங்கு மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சுங்க கட்டணத்தை விட ஒப்பந்ததாரர் கூடுதல் கட்டணம், கூடுதல் வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர்.
சாலை மறியல் போராட்டம்
எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி, ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள சுவஸ்திக் கார்னர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது வியாபாரிகள் கூறியதாவது:-
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள ஒரு கடைக்கு தினசரி ரூ.16 வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் ரூ.50-ம், காய்கறி மூட்டை ஒன்றுக்கு ரூ.7-க்கு பதிலாக ரூ.30-ம், வாகன அனுமதி கட்டணமும் பல மடங்கு உயர்த்தியும் வசூலிக்கின்றனர். மேலும் பணத்தை உடனடியாக கட்டவில்லை என்றால் கடையை காலி செய்து விடுவதாகவும், மிரட்டல் விடுக்கின்றனர். இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்தே நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். ஆனால் இவர்கள் திடீரென கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் நாங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.
இவ்வாறு வியாபாரிகள் கூறினார்கள்.
அதற்கு போலீசார், ‘உங்களுடைய கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீங்கள் எவ்வளவு வாடகை கொடுக்க வேண்டும், சுங்க கட்டணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து மார்க்கெட் பகுதியில் பலகை வைக்க ஏற்பாடு செய்யப்படும்‘ என்றனர். இதற்கிடையைில் ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வியாபாரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.