டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சி தடகள வீராங்கனை தனலெட்சுமி தேர்வு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சி தடகள வீராங்கனை தனலெட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-07-05 19:58 GMT
திருச்சி
திருச்சி
திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி (வயது 22). தடகள வீராங்கனையான இவர் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய தடகள போட்டியில் பங்கேற்ற தனலெட்சுமி தங்கப்பதக்கத்தை வென்று திருச்சி திரும்பினார். அவருக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இந்தநிலையில் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சியை சேர்ந்த தனலெட்சுமியும் பங்கேற்று இருந்தார். இதில் நேற்று முன்தினம் நடந்த 400 மீட்டர் தொடர் (ரிலே) ஓட்டத்தில் பங்கேற்று தனலெட்சுமி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் வருகிற 23-ந் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு அவர் தேர்வாகி உள்ளார். இதையடுத்து தனலெட்சுமிக்கு அவரது தாய் உஷா, பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம், மாற்றம் அமைப்பின் நிர்வாகி தாமஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்