கொரோனா பாதிப்பு குறைவதால் ஆஸ்பத்திரிகளில் காலியான படுக்கைகள்

மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கேர் சென்டர்களில் படுக்கைகள் காலியாகி வருகிறது.

Update: 2021-07-05 19:50 GMT
மதுரை, ஜூலை
மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கேர் சென்டர்களில் படுக்கைகள் காலியாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு
மதுரையில் நேற்று 73 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 45 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 98 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 60 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில் 70 ஆயிரத்து 863 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 639 ஆக குறைந்துள்ளது.
நேற்று மதுரையை சேர்ந்த 60, 55 வயது ஆண்கள், 47, 63 வயது பெண்கள் உயிரிழந்தனர். இவர்கள் 4 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,125 ஆக உயர்ந்துள்ளது.
கேர் சென்டர்கள்
மதுரையில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை உருவானது. 
இதனை கருத்தில் கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 34 இடங்களில் கொரோனா கேர் சென்டர்கள் என்ற கொரோனா கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
2-வது அலை தீவிரமடைந்த நிலையில் அங்குள்ள படுக்கைகளும் நிரம்பி வழிந்தன. தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டதால் அங்கு 26 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 2,220 படுக்கைகள் காலியாக இருக்கிறது. ஒரு சில மையங்களில் ஒரு நோயாளி கூட இல்லாமல் படுக்கைகள் காலியாக இருக்கின்றன. இதுபோல், அரசு ஆஸ்பத்திரிகளிலும் கிட்டத்தட்ட 2,500 படுக்கைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,400 படுக்ககைள் காலியாக இருக்கின்றன.

மேலும் செய்திகள்