முதல் நாளில் 511 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி
மதுரையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரை,ஜூலை
மதுரையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
மத்திய அரசு, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயேன் தொடங்கி வைத்தார். அரசு ஆஸ்பத்தி டீன் ரத்தினவேல், மருத்துவமனை இருப்பிட அலுவலர் ஸ்ரீலதா, உதவி இருப்பிட அலுவலர் விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை
இதுகுறித்து, மதுரை மாநகராட்சி கமிஷனர் காத்திகேயேன் கூறுகையில், “மாநகராட்சி பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாநகராட்சியை பொறுத்த வரை கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் விளைவாக பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 14 நாள்கள் கொரோனா பரவல் குறித்து கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
டீன் ரத்தினவேல் கூறுகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் நாளில் 12 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களின் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதிக நபர்கள் தடுப்பூசி செலுத்த விரும்பினால், அதற்கான தடுப்பூசிகளும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு பெறப்படும் என்றார்.
துணை இயக்குனர் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. திருப்பரங்குன்றம் வட்டாரம் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தொடங்கி வைத்தார். அந்த மையத்தில் 19 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பல இடங்களில் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 511 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.