வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
மூன்றடைப்பு அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
நாங்குநேரி:
மூன்றடைப்பு அருகே உள்ள தெற்கு இளையாமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் நம்பிராஜன் (வயது 22). சமையல் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தெற்கு இளையாமுத்தூர் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதேபோல் நேற்று முன்தினம் நாகர்கோவிலிலிருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மூன்றடைப்பு போலீஸ் நிலையம் அருகே நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இந்த இருசம்பவங்கள் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.