18 போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 18 போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையத்தை தொடங்கி வைத்த டி.ஐ.ஜி. பாண்டியன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார்.

Update: 2021-07-05 19:03 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவி மையம் 18 போலீஸ் நிலையங்களில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியனால் இணையவழி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கான அறிமுக பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் காவல்துறை கூடுதல் இயக்குனர் (தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்) சீமாஅகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மேலும் மத்திய அரசின் நிர்பயா நிதியிலிருந்து மேற்கண்ட பெண்கள் உதவி மையம் ஒவ்வொன்றுக்கும் மடிக்கணினி, இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனை பயன்படுத்தி போலீஸ் நிலையங்களுக்கு வரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவைப்படும் சட்டம், பாதுகாப்பு, மருத்துவம் சார்ந்த உதவிகள், அரசின் நலத்திட்டங்கள், மனநல ஆலோசனைகள் ஆகியவற்றை உடனடியாக திறம்பட செயல்படுத்துமாறும் டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

181 சுவரொட்டி அறிமுகம் 

அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து அவற்றின் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து, பெண்கள் உதவி மைய எண் 181 சுவரொட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, குற்ற வழக்குத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ், மகளிர் நீதிமன்ற அரசு வக்கீல் ராதிகா செந்தில், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் தமிழன்பன், மாவட்ட சமூகநலத்துறை மணிமேகலை, ஒருங்கிணைந்த சேவை மைய பத்மாவதி, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்