வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்ற 2 பேர் கைது
வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பனின் மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் தீ வைத்து எரித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது அதே பகுதியை சேர்ந்த முத்துக்குட்டி (30) என்று அய்யப்பன் நினைத்தாராம். நேற்று முத்துக்குட்டி வண்ணார்பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அய்யப்பனும், அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனும் (19) அங்கு வந்து முத்துக்குட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் அரிவாளை எடுத்து முத்துக்குட்டியை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.