முன்விரோத தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
முன்விரோத தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
சிவகாசி
திருத்தங்கல்-பழைய சாட்சியாபுரம் ரோட்டில் வசித்து வருபவர் கனக ராஜ் (வயது 21). இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கனகராஜ் தனது நண்பர்கள் அய்யனார், பாண்டிமணி, சுதாகர், அந்தோணி ஆகியோருடன் குறுக்குபாதையில் உள்ள ஒரு மைதானத்தில் மது அருந்தி உள்ளார். அப்போது அதே மைதானத்தில் மது அருந்திக்கொண்டிருந்த பனையடிப்பட்டி தெருவை சேர்ந்த சிட்டிசன் என்கிற சிவா, சிட்டு, சாமுவேல் ஆகியோர் தகராறு செய்ததாக கூறப் படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து கனகராஜ் தனது வீட்டின் அருகில் நண்பர் அய்யனாரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிட்டு, சிவா, முத்துகுமார், சாமுவேல் மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் கனகராஜை வெட்டினர். அப்போது அருகில் இருந்த அய்யனார் தடுத்துள்ளார். இதில் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.