நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு
குறைதீர்க்கும் நாளில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.தொடர் ஆர்ப்பாட்டம் நடத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
குறைதீர்க்கும் நாளில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த தால் பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அப்போது கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் மனுக்களை கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்டுச்சென்றனர். அதைத்தொடர்ந்து கொரோனா 2-வது அலை தாக்கத்தால் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.
நாட்டுப்புற கலைஞர்கள்
இந்த நிலையில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடத்தாவிட்டாலும், ஊரடங்கில் பெருமளவு தளர்வு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குவிந்தனர். அணி, அணியாக பொதுமக்கள் திரண்டு வந்து, கலெக்டர் அலுவலக நுழைவுவாசலில் வைக்கப்பட்டிருந்த மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர்.
நெல்லை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் மாரியப்பன், சரவணன், கணபதி, வரதன் உள்ளிட்டோர் இசை கருவிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் ‘‘நாதசுரம், தவில், பம்பை, வில்லிசை, பஞ்சவாத்தியம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிராம கோவில்களில் நடைபெறும் விழாக்களில் மட்டுமே வருமானம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் எந்தவித நிகழ்ச்சியும் நடைபெறாததால் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் உள்ளனர். எனவே நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகள் கல்வி மற்றும் மேம்பாட்டு செலவிற்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். குடும்ப பராமரிப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
இந்து மக்கள் கட்சி
இதுதவிர கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கணேசபாண்டியன் தலைமையில் தென்மண்டல தலைவர் ராஜாபாண்டியன், இளைஞர் அணி தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பெட்டியில் போட்ட மனுவில், ‘‘தமிழக அரசு அனைத்து மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஏழை, எளிய பெண்கள், சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய் வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
இதேபோல் அகில பாரத இந்து மகாசபா நெல்லை மாவட்ட தலைவர் இசக்கிராஜா தலைமையில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அதில், ‘‘நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அசைவ கடைகளை அகற்ற வேண்டும். கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பொது கழிப்பிட வசதிகள் அமைத்து தர வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா
தமிழர் விடுதலை களம் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கிராம மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘நெல்லை அருகே உள்ள நரசிங்கநல்லூர் கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளோர் பெரும்பாலும் வீட்டுமனை இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்க வேண்டும். இதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்’’ என்று கூறி இருந்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் மதுபால், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மனுவில், ‘‘ஐ.ஐ.டி. மற்றும் உயர் கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமையை அகற்ற வேண்டும். தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தனர். இதேபோல் ஆதித்தமிழர் கட்சி சார்பிலும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.
முதியோர் ஓய்வூதியம்
நெல்லை அருகே உள்ள பத்தமடை கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த 72 வயது சண்முகசுந்தரம் தனது மனைவியுடன் வந்து முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்தார்.
இதேபோல் ஏராளமான மக்கள் முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா, வறுமைக்கோடு பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி மனுக்கள் கொடுத்தனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பல்வேறு அமைப்பினர் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.