விவசாயிகள் பேரழிவை சந்திப்பார்கள்: கர்நாடக அரசு கட்டிய அணையை மத்திய அரசு அகற்ற வேண்டும் கிருஷ்ணகிரியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
கர்நாடக அரசு கட்டிய அணையால் விவசாயிகள் பேரழிவை சந்திப்பார்கள். இதனை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன நீராகவும் தென்பெண்ணை ஆறு விளங்குகிறது. இந்தநிலையில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு படுகை அணை என உச்ச நீதிமன்றத்தில் கூறி புதிதாக உயர்மட்ட தடுப்பணையை கட்டி உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் பாசன பகுதிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கண்டித்தும், கர்நாடகாவிற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்தது. கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார்.
பேரழிவை ஏற்படுத்தும்
பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன் தலைமை தாங்கினார். தர்மபுரி மண்டல தலைவர் சின்னசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாநகர தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டி உள்ள கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக அண்டை மாநிலங்களை தூண்டிவிடுகிறது. குறிப்பாக கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகதாது அணை கட்டுவதற்கு முயற்சிக்கிறது. தற்போது தென்பெண்ணையில் இணையும் மார்க்கண்டேய நதியில் படுகை அணை என்கிற பெயரில் 50 மீட்டர் உயரத்தில் சட்டவிரோதமாக அணையை கட்டி உள்ளது. மழை வெள்ள காலங்களில் இந்த அணையால் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி கர்நாடக விவசாயிகளும் பேரழிவை சந்திப்பார்கள்.
அணையை உடைத்தெறிய...
எனவே இதை அகற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுத்தால் தமிழக விவசாயிகள் கர்நாடக விவசாயிகளோடு கலந்து பேசி அணையை உடைத்தெறிய தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன். முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளாவை மத்திய அரசு அனுமதிக்கிறது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இப்படி தமிழகத்தை தனிமைப்படுத்த வேண்டும், தென்னிந்தியா ஒன்றுபடுவதை சீர்குலைக்க வேண்டும் என்கிற மறைமுக நோக்கோடு மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களில் நீர் ஆதார பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.