வழிபாட்டு தலங்கள் திறப்பு ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி

மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டது.

Update: 2021-07-05 17:32 GMT
கடலூர், 

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 
இதற்கிடையில் பொது போக்குவரத்து கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது. ஆனால் நோயின் தாக்கம் குறைந்து வந்ததால் கடந்த 21-ந்தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் போக்குவரத்து தொடங்கியது.

பின்னர் கடந்த 28-ந்தேதி 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

 இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஒரே விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து தொடங்கும் என்றுஅறிவிக்கப்பட்டது.

பஸ்கள் இயக்கம்

மேலும் வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும். ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடலாம். பொழுதுபோக்கு இடங்கள், கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். உடற்பயிற்சி கூடங்கள், தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி போன்ற பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.


அதன்படி நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்தும் கட்டுப்பாடு நீக்கப்பட்ட சேலம், கோவை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 
இது தவிர தனியார் பஸ்களும் முழுமையாக இயக்கப்பட்டன.


வழிபாட்டு தலங்கள் திறப்பு

இதேபோல் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 1,640 கோவில்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து திறக்கப்பட்டன. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தனர். ஆனால் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலான கோவில்களில் கூட்டம் இல்லை.

ஓட்டல்களிலும் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. முன்னதாக அவர்கள் சானிடைசர் வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

 பூங்காக்களும் திறக்கப்பட்டன. முக கவசம் அணிந்த நபர்களே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், மதுபார்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் செய்திகள்