பேரணாம்பட்டு அருகே விமானத்தில் வந்து மாடு திருட்டில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்தவர் கைது
அடிக்கடி விமானத்தில் வந்து மாடு திருடும் தொழிலில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பேரணாம்பட்டு அருகே மாடு திருடிச்சென்ற போது கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு
மாடு திருட்டு
பேரணாம்பட்டு டவுன் புதுவீதியைச் சேர்ந்தவர் ரசாக் (வயது 50), மாடு வியாபாரி. இவர் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று முன்தினம் ஏரிகுத்தி கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுச் சென்றார். இரவு ஆகியும் பசு மாடு வீடு திரும்ப வில்லை. இதனால் ரசாக் தனது பசுமாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் மாடு கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து இதுகுறித்து ரசாக் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை பேரணாம்பட்டு - வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
விமானத்தில் வந்து மாடு திருட்டு
அப்போது ஆந்திராவை நோக்கி சென்ற ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு பசு மாடு இருந்தது தெரிய வந்தது. மினி லாரியை ஓட்டிச் சென்றவர் இந்தியில் பேசினார். இதனால் இந்தி தெரிந்த நபர்கள் மூலம் பேசி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரியானா மாநிலம் புனானா மாவட்டம் ஜமால்தார் கிராமத்தை சேர்ந்த அக்முதீன் (43) என்பது தெரியவந்தது.
மேலும் டெல்லியிலிருந்து அடிக்கடி பெங்களூருக்கு விமானத்தில் வந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனது நண்பரும் ஷாகில் என்பவரிடம் வாகனத்தை பெற்று போலி பதிவெண்ணை பயன்படுத்தி மாடுகள் திருடி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை ஆந்திர மாநிலத்தில் 20-க்கு மேற்பட்ட மாடுகளை திருடி இறைச்சி கடைகளில் விற்று பணம் சம்பாதித்து சொகுசாக இருந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று ஏரிகுத்தி கிராமத்திற்கு வந்து தனியாக மேய்ந்து கொண்டிருந்த ரசாக்கிற்கு சொந்தமான பசு மாட்டை திருடி சென்று வனப்பகுதியில் மறைவாக நிறுத்தி வைத்து, அதிகாலையில் பசு மாடுடன் தப்பி செல்ல முயன்ற போது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். அவரிடமிருந்து பசுமாடு, ஆந்திர மாநில போலி பதிவெண் கொண்ட மினி லாரி, மாடுகள் திருடி விற்ற பணம் ரூ.70 ஆயித்து 800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல்செய்து, அக்முதீனை கைது செய்து குடியாத்தம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.