தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியைசேர்ந்த 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவராக இருப்பவர் திருமாறன். இவர் தமிழக நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் மதுரை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த கைது சம்பவத்தை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் திருமாறனை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.