நெகமம், சுல்தான்பேட்டை பகுதிகளில் 183 பேருக்கு கொரோனா பரிசோதனை
நெகமம், சுல்தான்பேட்டை பகுதிகளில் 183 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெகமம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறையினர் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதுடன், சிறப்பு முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நெகமம் அருகே கள்ளிப்பட்டி, கணக்கம்பட்டி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்கள் என 103 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார், கிராம சுகாதார செவிலியர் நித்யா அடங்கிய குழுவினர் சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதேபோல சுல்தான்பேட்டை, வாரப்பட்டியில் நேற்று தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் அரசு டாக்டர் சந்தோஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 80 பேரிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், வாரப்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் செய்து இருந்தனர்.