ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தல்: போலீசாரால் தேடப்பட்டவர் கைது
ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு கஞ்சா வியாபாரி கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், இது குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி தஞ்சை மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக 83 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சாவை கடத்தி வந்த லாரி மற்றும் கஞ்சா விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கஞ்சா கடத்தல்காரர்கள், வியாபாரிகள் என 12 பேரை கைது செய்தனர்.
எனவே ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தியது தொடர்பாக முக்கிய நபரை போலீசார் தேடிவந்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆரோக்கியதாஸ் மீது கஞ்சா கடத்தல் உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாசை தனிப்படை போலீசார் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆரோக்கியதாசிடமிருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்த தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள கோவில்பத்து பகுதியை சேர்ந்த குமார் என்ற கிட்டாச்சி குமார் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் குமார் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தப்பி சென்ற போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிட்டாச்சி குமார் மீது அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.